"தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் முக்கியமான பிரமுகர் ஒருவர் அடுத்த பிரதமர் வேட்பாளராக வருவார்' என சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிடப்பட்ட செய்தி, டெல்லியையே அசைத்திருக்கிறது. "பிரதமர் மோடி 75 வயதில் பதவியை விட்டு விலக்கப்படுவார். 2029ல் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அமித்ஷாவையோ, யோகி ஆதித்யநாத்தையோ ஏற்கமாட்டார் கள். தமிழகத்தில் இருந்துதான் பிரதமரை தேர்ந்தெடுப்பார் கள். அவர் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர்தான்' என சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டது. இதற்காக மக்கள் கருத்தை அறிய தமிழகம் முழுவதும் ஒரு ரகசிய சர்வேவும் நடத்தப்பட்டது.  அந்த சர்வேயில் பா.ஜ.க.வின் முன்னாள் மா.த.வின் அரசியல் எதிர்காலம் பற்றி கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமான கேள்வி, "இவர் பிரதமர் ஆவதை நீங்கள் விரும்புகிறீர்களா?' என்பதுதான். "இவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்?' என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது அந்த சர்வேயில். 

Advertisment

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இவர் மீதிருந்த ஆதரவு நிலை கணிசமாக குறைந்துவிட்டது. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் இவருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் முன்பு இருந்தார்கள். அவர்கள் மனநிலை மாறி, தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இவரது சொந்த சாதியில் சில இடங்களில் மட்டும் இவருக்கு சிறிதளவு ஆதரவு தென்படுகிறது என முடிவுகள் வந்தது. 

இந்த சர்வேயை எடுத்தது சாட்சாத் அவரது மனைவிதான். சட்டமன்றத் தொகுதியில் போட்டிபோட திட்டமிட்டுள்ள பா.ஜ.க. முன்னாள் மா.த., கோவையில் அதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் திருச்சியில் தங்கியிருந்த ஹோட்டலில் இவரும் ரூம் போட்டு ‘நான் பிரதமருக்கு நெருக்கம்’ என காண்பிக்க நினைத்தார். ஆனால், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக இவரை எச்சரித்தார்கள். அதன்பிறகு இவர் அந்த ஹோட்டலை விட்டே ஓடினார். இந்நிலையில் ‘நான்தான் அடுத்த பிரதமர்’ என சமூக வலைத்தளங்களில் தனது ஆதரவாளர்கள் மூலம் இவர் தகவல் பரப்பவே... மோடியே அதிர்ந்துவிட்டார். டென்ஷனான பா.ஜ.க. தலைமை, இவரைக் கூப்பிட்டு மிகக்கடுமையான வார்த்தைகளில் எச்சரித்து அனுப்பியது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். 

இந்நிலையில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், ஜான்பாண்டி யன், அன்புமணி ஆகியோரைத் தூண்டிவிட்டு எடப்பாடிக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பெரிய மோதலை உருவாக்க இவர் திட்டமிட்டார். ஓ.பி.எஸ். பிரதமரை சந்திப்பதற்காக மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுத வைத்தார். இதற்கு எடப்பாடி கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கவே ஓ.பி.எஸ்.ஸின் முயற்சி வீணாகிப்போனது. இப்பொழுது ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் நடிகர் விஜய்யின் சிக்னலுக்காக காத்துக் கிடக்கிறார்கள். விஜய் மூன்றாவது அணி கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என டி.டி.வி. தினகரன் பேட்டியளிக்கும் அளவிற்கு கொண்டுவந்த பிறகும் விஜய் இவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. எனவே, திரிசங்கு சொர்க்கம் போல அரசியல் வானில் நிற்கிறார்கள் இவர்கள். விஜய் கட்சிக்கு வருவேன் என அறிவித்த மருது அழகுராஜ், காளியம்மாள் போன்றவர்களையும் விஜய் திரும்பிப் பார்க்கவில்லை. 

Advertisment

நடிகர் விஜய் யாரையும் எளிதில் நேரடியாக அணுக முடியாத ஆளாகவே இருக்கிறார். இதை மாற்றுவதற்கு பா.ஜ.க. மு.மா.த. விஜய் பக்கம் பேசிப்பார்த்தார். ஆதவ் ஆர்ஜூன், புஸ்ஸி ஆனந்த், ஜான்ஆரோக்கியம் இவர்களைத் தாண்டி விஜய்யிடம் நெருங்க முடியவில்லை. விஜய்யின் கூட்டணியைப் பலப்படுத்தி எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்கிற அவரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. விஜய் பா.ஜ.க. கூட்டணியை விட்டுவிட்டு  எடப்பாடி வெளியே வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் மற்றவர்களை மதிக்கவில்லை என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள். 

இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பட்டியலில் குஷ்பு,  கே.டி.ராகவன் போன்ற பா.ஜ.க. மு.மா.த.வால் ஒதுக்கப்பட்டவர் களுக்கு பதவி கொடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன். முன்னாள் தலைவரின் ஆதரவாளர்கள் ரமேஷ் சிவா, உமா ரவி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் நயினார். பா.ஜ.க. மு.மா.த.வின் ஆதரவாளர்கள் நீக்கம், அவரது எதிர்ப்பாளர்களுக்கு பதவி என இரண்டு விசயங்களைச் செய்த நயினார் நாகேந்திரன், மற்றபடி பழைய நிர்வாகிகளையே நீடிக்க வைத்துள்ளார். இது நயினார் ஒரு தற்காலிகத் தலைவர் என்பதையே காட்டுகின்றது. சட்டமன்றத் தேர்த லில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் நயினார் அமைச்சராகிவிடு வார். அதன்பிறகு நான் மறுபடியும் மாநிலத் தலைவராகிவிடுவேன் என்கிறார் முன்னாள் மா.த. இப்படி தனிக்கட்சி, எம்.எல்.ஏ. வேட்பாளர், மீண்டும் மாநிலத் தலைவர், 2029ல் பிரதமர் என ஏகப்பட்ட கோமாளி வேஷங்களைப் போட்டு அனை வரையும் குழப்பிவரு கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக் கிறார்கள்.

___________________________________________________________________________________________


இறுதிச் சுற்று! 
த.வெ.க.வுக்கு அவைத்தலைவர் ஓ.பி.எஸ்.?

Advertisment

ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ளாத பா.ஜ.க.வை புறந் தள்ளிவிட்டு, விஜய்யுடன் இணைந்து தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன யோசனையை ஏற்று, தனது ஆதரவாளர்களுடன் 31-07-2025 வியாழக்கிழமை அன்று ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., தனிக்கட்சி துவக்கி "விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது த.வெ.க.வில் இணையலாமா?' என்று கருத்துக் கேட்ட தாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில்,  "நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் அவைத்தலைவர் பதவி வழங்குகிறோம்'' என்று ஓ.பி.எஸ்.ஸிடம் விஜய் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.   

-இளையர்